வலைவீசி தெப்பம் குறித்த திருவிளையாடல் புராணம்

முன்பொரு காலத்தில் கயிலையில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேதங்களை உபதேசித்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதை கவனிக்காமல் அவரது சிந்தனை வேறு பக்கம் இருந்தது. அதை அறிந்த சிவபெருமான் பார்வதி தேவி மீது கோபம் அடைந்தார். நீ மீனவ பெண்ணாக பூலோகத்தில் பிறக்க வேண்டும் என பணிக்கிறார். இதை அறிந்த விநாயகர், முருகப்பெருமான் கோபம் அடைந்து சிவபெருமானிடம் வந்தனர்.

தாய்க்கு அளித்த சாபத்தை திரும்ப பெறுமாறு கூறினார்கள். ஆனால் அவர் மறுத்ததால் விநாயகர் அங்கிருந்த தேவ புத்தகங்களை எடுத்து கடலில் எறிந்தார். ஆனால் முருகன், ஒருபடி மேலே சென்று சிவபெருமான் கையில் இருந்த தேவபுத்தகத்தையும் பிடுங்கி வீசி, அதே கடலில் தூக்கி எறிந்தார். அதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான் முருகனையும் சபித்தார். கயிலையில் சிவபெருமானின் மெய்க்காப்பாளர் அதிகார நந்தி. எனவே சிவபெருமான் அதிகார நந்தியை அழைத்து உன்னை கேட்காமல் விநாயகர், முருகன் எப்படி உள்ளே வந்தனர் என்று கேட்டார்.

பின்னர் நந்தி மீது கோபம் அடைந்து, “நீ கடலில் சுறா மீனாக சென்று உலகில் அனைவரையும் துன்புறுத்துவாய்” என்றார். பின்னர் அதிகார நந்தியும் பூமிக்கு வந்து, சுறாவாக மாறி கடலில் விழுந்த தேவ புத்தகங்களை எல்லாம் எடுத்து தனது தலைமீது வைத்து பாதுகாத்தார். இதற்கிடையில் கடலில் ஒரு சுறா மீன் மிகவும் அட்டகாசம் செய்வதாக மீனவர்கள் தங்கள் நாட்டு மன்னரிடம் தெரிவிக்கின்றனர். உடனே அவர் முரசு அறிவித்து அந்த மீனை பிடிப்பவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்கிறார். உடனே சிவபெருமான் மீனவர் உருவத்தில் மன்னனிடம் வந்து, மீனை பிடிப்பதாக தெரிவித்தார்.

அவரை பார்த்த மன்னன், “உங்களை பார்த்தால் மீனவர் போன்று தெரியவில்லை. பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் போன்று உள்ளது. நீங்கள் எப்படி இந்த வேலையை செய்து முடிப்பீர்கள்” என்று கேட்டுள்ளார். சிவபெருமான் என்னை தவிர வேறு யாரும் அந்த மீனை பிடிக்க முடியாது என்று கூறி, தான் வைத்திருந்த வலையை வீசுகிறார்.

அனைவரின் வலையையும் கிழித்து எறிந்த அந்த சுறா மீன் சிவபெருமானின் வலையில் சிக்கி அதில் இருந்து தப்ப முடியவில்லை, அதை தொடர்ந்து மன்னரும் தனது மகளான பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அதை மச்சகந்திவிவாகம் என்பர். அதை தொடர்ந்து சிவபெருமான், சுறா மீன் வடிவில் இருந்த நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து, மக்களை காத்து தனது திருவிளையாடலை நிறைவு செய்கிறார். இதுவே வலைவீசி அருளிய திருவிளையாடல் புராணம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.