இலங்கையின் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்

உலகெங்கிலும் உள்ள 180க்கும் மேற்பட்ட முக்கிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் இலங்கையின் நிதிக் கடன்கள் ரத்துச்செய்யப்பட வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை குறித்து கலப்புக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் கடன்களை ரத்துச்செய்யுமாறு, கடன்கொடுனர்களிடம் இந்த வருட ஆரம்பத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுவே, இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என்று குறித்த 180 பொருளாதார வல்லுநர்களும், நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கோரிக்கை நிராகரிப்பு
எனினும் ஏனைய பொருளாதார நிபுணர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அல் ஜசீரா செய்தித்தொகுப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, கடந்த டிசம்பர் மாத நிலைவரப்படி இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சுமை 52 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமானதாகும்.

அதில், கிட்டத்தட்ட 40 சதவீதம் நிதி நிறுவனங்கள் உட்பட தனியார் கடன்களாகும். மீதமுள்ளதில் 52 வீதம் சீனாவிடம் இருந்த பெற்றக்கடன்களாகும்.

ஜப்பானிடம் இருந்து 19 சதவீத கடனை இலங்கை பெற்றுள்ளது. இந்தியாவிடம் இருந்து 12 சதவீத கடனை இலங்கை பெற்றுள்ளது.

இந்தநிலையில், பெஸ்ட்செல்லர் கெப்பிட்டல் நூலை எழுதிய தோமஸ் பிகெட்டி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் டானி ரோட்ரிக் மற்றும் இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் உட்பட பல முக்கிய கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இலங்கையின் கடனை அனைத்து வெளி கடனாளிகளாலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இந்தியப் பொருளாதார நிபுணர்
எனினும் கடன்கள் ரத்துச்செய்யப்பட்டால், அது அதிக வட்டிகளுக்கு கடன்களை பெற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கே வாய்ப்பாக அமையும் என்று ஏனைய பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால். தற்போதைய உலகளாவிய நிதிய அமைப்பு வீழ்ச்சியடையும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான டபிள்யூ.ஏ.விஜேவர்தன உட்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடன் ரத்துத் திட்டம் செயற்படுத்தவேண்டும் என்று கோரியுள்ள கல்வியாளர்கள் பலர் பொருளாதார வல்லுநர்கள் அல்ல என்று அவர் அல் ஜசீராவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார அமைப்பு ஒன்றுக்கொன்று சார்ந்த, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாகும். இதை உடைத்தால் உலகம் அழிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த 180 பொருளாதார வல்லுனர்களும் பொறுப்புக்கூறல் நிறுவப்பட வேண்டும் என்று வாதிட வேண்டும் என்று ஜயவர்த்தன கோரியுள்ளார். கடன் வாங்கிய பணம், ஆட்சியாளர்களால் வீணடிக்கப்பட்டது அல்லது கையகப்படுத்தப்பட்டது.

பொருளாதாரத்தில் தார்மீக ஆபத்து பிரச்சினை
குறித்த கடன்களால் பயனடையாத மக்களை விட்டுவிட்டு. அந்த ஆட்சியாளர்களே இழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டிய அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ஊழல் சர்வாதிகாரிகள் ஏற்கனவே கடன் வாங்கிய பணத்தால் பயனடைந்துள்ளனர்.

கடன் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. மேலும் தொடர்ந்து கடன் வாங்கி அந்த பணத்தை தனிப்பட்ட லாபங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

இது பொருளாதாரத்தில் தார்மீக ஆபத்து பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது என்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.