யாழில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் 10 லட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட யாழ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரை இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

காணி ஒன்றுக்கான போலி காணி உறுதியை தயாரித்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு எதிராக வழக்கில் அவருக்கு சாதகமாக உதவி செய்வதாக கூறி, சந்தேக நபர் இந்த இலஞ்சத்தை கேட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் சந்தேக நபர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பொலிஸார் யாழ்ப்பாணம் சந்தைக்கு அருகில் இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட போது பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் முறைப்பாட்டாளர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.