சபரிமலையில் யோகிபாபு படத்தை ஆரம்பித்து வைத்த விக்னேஷ்சிவன்

யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ. ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.