குறட்டை பிரச்சினைக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்

தூங்கும் போது தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு இயல்பாகவே குறுகி விடுகிறது. இதன் கூடவே தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி (டான்சில்), மூக்கில் வளரும் சதை வளர்ச்சி (பாலிப்), தொப்பை வயிறு, வயிற்றில் ஏற்படுகின்ற காற்றின் அழுத்தம் அதிகப்படுவது, இதய நோய்கள், தைராய்டு பிரச்சினை, மூக்கு இடைச்சுவர் வளைவு போன்ற காரணங்களினால் பொதுவாக குறட்டை (ஸ்னோரிங்) ஏற்படுகிறது.

மேலும், குறட்டை விடும் பொழுது திடீரென சத்தம் நின்று போவது, மூச்சு விட திணறுவது போல் இருப்பது ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ என்றழைக்கப்படும். ஆகவே குறட்டை சத்தம் அதிகமாக விடுபவர்கள் இதய நோய், நுரையீரல் நோய், தொண்டை நோய்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர் மூலம் பரிசோதித்து கொள்ள வேண்டும். குறட்டை நீங்க பழக்க வழக்கங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள்:

1) உடல் பருமன், தொப்பையை குறைத்துக்கொள்ள சீரான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இன்றியமையாதது.

2) மல்லாந்து படுப்பதைத் தவிர்த்து ஒரு பக்கமாக தூங்கினால் தொண்டை சதைகளின் தளர்ச்சி சற்று குறைந்து குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

3) மூக்கடைப்பு, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தால் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மஞ்சள் தூள் வைத்து ஆவி பிடிக்கலாம்.

4) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் எடுத்து பொடித்து காலை, இரவு டீ போல போட்டு குடிக்கலாம்.

5) லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு சேர்த்து டீ போட்டு குடிக்கலாம், இது தொண்டை சதைகளுக்கு சிறந்தது.

6) பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) தினமும் செய்ய வேண்டும்.

7) புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும்.