கடுமையான பனிப்புயலால் அவதியுறும் அமெரிக்க மக்கள்!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ள நிலையில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் கடந்த வெள்ளி கிழமை 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து அதனை சீர்செய்யும் பணி நடந்தது. சூறாவளி தாக்கம் நேற்று முன்தினமும் தொடர்ந்தது. இதனால், 7 லட்சம் பேர் வரை மின்சாரமின்றி இருளில் மூழ்கினர்.

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடமுடியாத நிலையில் மக்கள்
மற்ற இடங்களில் நிலைமை ஓரளவுக்கு சீரமைந்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றால் முடங்கி போன மக்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில், கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர்.

குளிர்கால சூறாவளியால் சாலைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிலர் உறைபனியால் காருக்குள்ளேயே சிக்கி கொண்டனர்.

இதுதவிர, விமான மற்றும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர்.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமான சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டும், 7,600 விமானங்கள் காலதாமத்துடனும் இயக்கப்பட்டன.

நியூயார்க் நகரில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் வாரம் முழுவதும் கடுமையான குளிரும், பனிபடர்ந்தும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் தொழில்கள் முடங்கின. விமானங்கள், ரெயில்கள் என அனைத்து வித வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு சாலைகள் மூடப்பட்டன.

குளிர்கால புயலை முன்னிட்டு சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையிலான மின்அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. வாஷிங்டன் டி.சி.யில் 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்பநிலை நேற்று பதிவானது.

அமெரிக்காவில் மின்னிபோலிஸ் நகரம் நேற்று மைனஸ் 6 டிகிரி பாரன்ஹீட் என மிக அதிக குளிரான நகராக பதிவாகியுள்ளது.