பாதுகாப்பற்ற வீட்டுப்பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே பெற்றோர்களும், குழந்தை காப்பாளர்களும் இதனைப்பற்றி அறிவது அவசியம்.

* குழந்தைகள் சமையலறையில் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்கவும். சூடான எண்ணெய், சூடான தண்ணீர், தீப்பட்டி போன்ற பொருட்களை கையாளுவதால் தீக்காயம் ஏற்படலாம். கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம்.

* மிக்ஸி, அயர்ன்பாக்ஸ், சுவிட்ச்போர்டு போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம். போன்ற கருவிகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது கவனமாக இருக்கவும். * மண்எண்ணெய், பெட்ரோல், பூச்சிக்கொல்லி போன்ற ஆபத்தான திரவியங்களை கை எட்டும் தூரத்திலோ, அல்லது குளிர்பானம் அருந்திவிட்டு காலியான பாட்டில்களிலோ ஊற்றி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனை குழந்தைகள் அறியாமல் குடிப்பதனால் பாதிப்பு ஏற்படலாம்.

* நாணயங்கள், ஊசிவகைகள், பேட்டரி, ஆணி, ரசகற்பூரம், கண்ணாடி, போன்ற சிறிய அளவிலான பொருட்கள் மற்றும் குழந்தைகளின் உள்ளங்கை அளவில் அடங்கும் பொருட்களை கையாளக் கூடாது. இப்பொருட்களை விழுங்குவதால் தொண்டை மற்றும் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்.

* கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய்யை தற்செயலாக உட்கொண்டால் வலிப்பு ஏற்படலாம்.

* வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளும் குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்ககூடாது. தற்செயலாக உட்கொண்டால் பாதிப்பு ஏற்படலாம்.

* செல்போன் (கைபேசி) தொலைக்காட்சி, மடிக்கணினி அளவோடு உபயோகிக்க வேண்டும். செல்போன் அதிகமாக உபயோகிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி மைல்கல்லில் பாதிப்பு ஏற்படலாம். மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக பராமரித்தால், அவற்றின் மூலம் வரும் விளைவுகளை முற்றிலும் தடுக்க முடியும்.