மின்கட்டணம் அதிகரிக்கப்படா விட்டால் நாடு இருளில் மூழ்கும்

அமைச்சரவை அனுமதி வழங்கியதன் பிரகாரம் மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால், அடுத்த வருடம் நாடு 6 மணிநேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

” மின்சார அலகு ஒன்றுக்கான செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளபோதும், அதில் அரைவாசிக்கட்டணமே மின்சாரப் பாவனையாளர்களிடம் இருந்து அறிவிடப்படுகிறது.

எனவே இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியாதுபோனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும். அதாவது மின்வெட்டுக்கு செல்ல நேரிடும்.

எனவே, நிலைமையை சமாளிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.