தனது மகளை முதன் முறையாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்த கிம்

வடகொரிய அதிபர் முதன்முறையாக தனது மகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். வடகொரியாவில் நடக்க கூடிய விசயங்கள் வெளியுலகிற்கு பரவலாக தெரிவதில்லை.

அந்நாட்டு சட்ட திட்டங்கள் அதற்கேற்ற வகையில் உள்ளன. கிம்முக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, உயர் பதவியில் அல்லது உயரதிகாரியாக இருந்தபோதும் மரண தண்டனை கூட வழங்கப்படும் சூழல் உள்ளது என்று அவ்வப்போது வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

கிம்மின் குடும்பம்
கிம்மின் குடும்பம் பற்றிய தகவலிலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கிம்முக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர் என நம்பப்படுகிறது.

அவர்களில் ஒருவர் கடந்த செப்டம்பரில் நடந்த தேசிய விடுமுறை தின கொண்டாட்டத்தின்போது, வெளியான புகைப்படத்தில் காணப்பட்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதன்முறையாக ஏவுகணை சோதனை நிகழ்வின்போது, தனது மகளையும் உடன் அழைத்து சென்ற கிம், அது தொடர்புடைய புகைப்படங்களை முதன்முறையாக உலகிற்கு இன்று தெரியப்படுத்தி உள்ளார்.

அதில், வெண்ணிறத்தில் கோட் ஒன்று அணிந்தபடி தனது தந்தையின் கைகளை பிடித்தபடி கிம்மின் மகள் நடந்து செல்கிறார். கிம்முக்கு மகள் இருப்பது பற்றி வெளியுலகுக்கு இதற்கு முன்பு தெரியாத நிலையில், இது பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளதாக வடகொரிய கே.சி.என்.ஏ. என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் வெளியுலகுக்கு கிம்மின் மகள் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது.