நஷ்ட ஈடு வழங்கி அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கும் அரசு!

இலங்கையில் அரச ஊழியர்கள் பலரை நஷ்டஈடு வழங்கி வீட்டிற்கு அனுப்ப நேரிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமை
மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து எவரும் விடுபட முடியாது. இந்த நிலைமைக்கு அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

நடந்தவற்றை மாத்திரம் கூறிக்கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் கட்சிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயற்பாட்டை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது.

எதிர்க்கட்சியும், அரச தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே நெருக்கடியான சூழலை வெற்றி கொண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். அரச வருமானத்தை தடுக்கும் வகையில் போராட்டங்கள் இடம்பெற்றால் நாட்டில் மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.

போராட்டங்கள் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைய கூடாது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

நாட்டிற்கு செய்யும் துரோகம்
நாட்டிற்கு டொலர் அனுப்ப வேண்டாம், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அரசியல்வாதிகள் குறிப்பிடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கூறப்படும் கருத்துக்கள் நாட்டிற்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்.

இதேவேளை அரச ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும். தற்போதுள்ள 15 இலட்சம் அரச ஊழியர்கள் என்ற எண்ணிக்கையை அரசினால் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

எனவே இவர்களுக்கான செலவீனங்களை குறைக்க ஒரு சில அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது நஷ்டஈடு வழங்கி அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப நேரிடும்.

மறுபுறம் அத்தியாவசிய அரச பதவிகளில் வெற்றிடம் காணப்படுகிறது. ஆனால் வெற்றிடமாக உள்ள அரச பதவிகளுக்கான நியமனங்களை கூட வழங்க முடியாத நிதி நெருக்கடி காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.