உலகின் முதல் Stretchable டிஸ்ப்ளே அறிமுகம் செய்த எல்ஜி

எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபிரீ-ஃபார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டுள்ளது. இதன் காரணமாக டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ அல்லது சுருக்கவோ முடியும்.

இவ்வாறு செய்யும் போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20 சதவீதம் வரை Stretchable திறன் கொண்ட உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இதில் 100ppi ரெசல்யூஷன், ஃபுல் கலர் RGB உள்ளது. அதிக தரம் கொண்டிருப்பதால், வணிக முறைக்கு ஏற்ப பல விதங்களில் பயன்படுத்த முடியும்.

காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் மிகவும் விசேஷமான சிலிகானின் மூலப் பொருளில் இருந்து இந்த Stretchable டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக Stretchable டிஸ்ப்ளேவை 12 இன்ச்-இல் இருந்து 14 இன்ச் வரை நீட்டிக்க முடியும். இந்த டிஸ்ப்ளே மைக்ரோ எல்இடி பயன்படுத்துகிறது.

வழக்கமான லீனியர் வயர்டு சிஸ்டம் போன்று இல்லாமல், இதில் உள்ள வளையும் தன்மை கொண்ட S-ஃபார்ம் ஸ்ப்ரிங் போன்ற வயர்டு சிஸ்டத்தை உருவாக்குகிறது. இது அதன் அசல் வடிவத்தில் இருந்து 10 ஆயிரம் முறை மாற்றக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், திடமாகவும் இருக்கும். இந்த டிஸ்ப்ளேவை சருமம், ஆடை, ஆட்டோமொபைல், விமானத் துறை என ஏராளமான துறைகளில் பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

வர்த்தக சாதனங்களில் இந்த டிஸ்ப்ளே எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எல்ஜி டிஸ்ப்ளே இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.