அமீரகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயம்

அரபு நாடு என்றாலே கடுமையான சட்ட திட்டங்களும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் நிறைந்தது என்ற மாயத் தோற்றம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் தித்திப்பைப் போல, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து நாட்டினரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் அங்கே உள்ளது என்பதை பறைசாற்றி இருக்கிறது, சமீபத்தில் துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்து கோவில். அதிலும் அந்த ஆலயத்தை, அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஸ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்துவைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஐக்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், மதநல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு மதங்களை சேர்ந்த சமூகத்தினர் அவரவர் பின்பற்றும் முறைப்படி வழிபடுவதற்கு ஏற்ற வகையில் வழிபாட்டு தலங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது.

ஏற்கனவே தேவாலயங்கள், சீக்கிய குரு தர்பார், புத்தர் கோவில், இந்து கோவில் என அனைத்தும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் அதிகமாக உள்ளதால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில், துபாயில் ஜெபல் அலி பகுதியில் ஷேக் ஜாயித் சாலை அருகில் 70 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், வழிபாட்டு பகுதியுடன் பிரமாண்டமான கோவில் வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துபாய் அரசு கடந்த 2019-ம் ஆண்டில் நிலம் கொடுத்தது.

அதேபோல இந்தக் கோவிலுக்கு சமூக மேம்பாட்டு ஆணையம் முறையான உரிமமும் வழங்கி உள்ளது. இந்த ஆலயம்தான் சமீபத்தில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தக் கோவில், ஏற்கனவே பர்துபாய் பகுதியில் அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோவில் அமைப்பின் சார்பில், சுமார் 6½ கோடி திர்ஹாம் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை உள்ளே நின்று வழிபாடு செய்ய முடியும். இந்த ஆலயத்தின் கட்டிடக் கலையானது, அரபு- இந்திய கலாசாரத்தை பிரபதிபலிக்கும் அம்சமாக அமைந்திருக்கிறது.

ஆலயத்தில் சிவன் – பார்வதி சிலைகளுடன் சிவலிங்கம் பிரதானமாக அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் பிற பகுதிகளில் விநாயகர், மகாலட்சுமி, கிருஷ்ணர், ஐயப்பன், பாலாஜி, லட்சுமி நாராயணர், துர்க்கை, சாய்பாபா, மூகாம்பிகை, சீதை மற்றும் லட்சுமணனுடன் கூடிய ராமபிரான், அனுமன் உள்பட 16 தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பூஜை செய்வதற்காக 12 குருக்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள சிலைகள் அனைத்தும் வெள்ளை மற்றும் கருப்பு மார்பிள் கற்களால் உருவானவை. அனைத்து சிலைகளும், இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்திற்குள் ஒரு பகுதியின் மேற்பரப்பில் பிரமாண்டமான விரிந்த தாமரை போன்ற அமைப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

அதேபோல மற்றொரு பகுதியின் மேற்பரப்பில் ஏராளமான மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. இவை பார்ப்பதற்கு சிறப்பான அலங்காரத் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. தலைநகர் அபுதாபி நெடுஞ்சாலை அருகே ஜெபல் அலி பகுதியில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு இருந்தும் பொதுமக்கள் எளிதாக வாகனங்களில் வந்து செல்ல முடியும். தற்போது பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இணையத்தளத்தில் முன்பதிவு செய்து வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இந்து கோவிலில் திருமணங்கள் மற்றும் சுப காரியங்களை நடத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மதநல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக திறக்கப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு, உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. உலக அளவில் எதிர்காலத்தில் சகோதரத்துவம், சமத்துவம், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை பறைசாற்றுவதாக துபாயில் உள்ள இந்து கோவில் விளங்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு மூலம் மற்றுமொரு பிரமாண்டமான இந்து கோவிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலானது அடுத்த ஆண்டு (2023) திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் கோபுர உச்சியில் பித்தளையால் உருவாக்கப்பட்ட கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் மைய கோபுரத்தின் மீதுள்ள பெரிய கலசம் 120 கிலோ எடையும், 6 அடி உயரமும் கொண்டது. இது தவிர சிறிய அளவிலான 8 கலசங்களும் உள்ளது. இவை ஒவ்வொன்றும் தலா 90 கிலோ எடையும், 4 அடி உயரமும் கொண்டதாகும்.