தரம் குறைந்த உரங்களை விற்ப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

அரசாங்கத்தின் எச்சரிக்கை
தரம் குறைந்த இரசாயன உரங்களை விநியோகிக்கும் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக தரம் குறைந்த இரசாயன உரங்களை விநியோகிக்கும் உர நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் உர நிறுவனங்கள்
இரசாயன உரங்களை தயாரிக்கும் அனைத்து உர நிறுவனங்களையும் விவசாய அமைச்சுக்கு அழைத்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மேலும் சில தீர்மானங்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல் விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக்கடன் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் டொன் யூரியாவின் ஒரு பகுதி கடந்த 28ஆம் திகதி விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் நிறையுடைய யூரியா மூட்டையை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.