டி20 கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (849 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 92 ரன்கள் குவித்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே (831 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (828 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு இறங்கினார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (799 புள்ளி) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் (762 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் எடுத்த இந்திய வீரர் விராட்கோலி 5 இடங்கள் எகிறி 9-வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டை (699 புள்ளி) பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (702 புள்ளி) மீண்டும் முதலிடம் அரியணையில் ஏறியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (647 புள்ளி) இரு இடம் அதிகரித்து 10-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (261 புள்ளி) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி (247 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா (189 புள்ளி) 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை தனதாக்கினார்.