திருப்பதி ஏழுமலையானில் ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் வசூலாகி சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் உண்டியலில் நகை, பணம் செலுத்தி வருகின்றனர்.

உண்டியல் வருவாயை வைத்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். உண்டியலில் தினமும் சராசரியாக ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாவது வழக்கம். கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. பிரம்மோற்சவ விழா காலத்தில் விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மீண்டும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் உண்டியல் வருவாய் கணிசமான அளவு அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

அன்று ஒரே நாளில் 80,565 பேர் தரிசனம் செய்தனர். 31,608 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் ஒரே நாளில் உண்டியல் வசூலில் இது சாதனையாக உள்ளது. இதற்கு முன்பு ஒரேநாளில் அதிகபட்சமாக ரூ.6.12 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இதேபோல் நேற்று 69,278 பேர் தரிசனம் செய்தனர். 17,660 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.