யாழில் வயோதிபர்களை குறி வைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள்

யாழில் மூதாட்டி ஒருவரின் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிக்காமம் – சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவரின் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருட்டு சம்பவம் நேற்று (19.10.2022) நடைபெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டிலுள்ள 2 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.