ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன்கள் எடுத்தார். மழை தொடர்ந்து பெய்ததால், ட்க்வொர்த் லூயிஸ் முறையில் 7ஓவரில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 6.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது மார்க் அடைருக்கும், தொடர் நாயகன் விருது டாக்ரெலுக்கும் வழங்கப்பட்டது.