மட்டக்களப்பில் வீதியோரத்தில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

மட்டக்களப்பில் ஆண்ணொருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13-08-2022) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முனைத்தீவு பெரிய போரத்தீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 11-ம் திகதி மட்டுநகர் லொயிஸ் அவனியூர் வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 12 ம் திகதி குறித்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, சிசிரிவி கமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து 22, 21 வயதுடைய இரு இளைஞர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதைக்கு அடிமையாகிய உயிரிழந்தவர் மனைவியுடன் பிரிந்து அவரது தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு வீதிக்கு அருகில் நிர்வாணமாக குறித்த நபர் கிடந்துள்ளதை பார்த்த இளைஞர்கள் இருவர் அவரை திருத்தும் நோக்கில் இவ்வாறு தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சலமாக மீட்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.