சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்று வந்தது.

ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெண்ட் – இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகள் மோதின. இப்போட்டியை உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர்.

போட்டி தலீபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட பல்வேறு நபர்களும் கண்டுகளித்தனர்.

போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.

மைதானத்தில் இருந்த கையெறி குண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் மைதானத்தில் கிரிக்கெட்டை கண்டுகளித்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். ஹரசன் மாகாணம் பிரிவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தலிபான்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.