திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது.
ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம். நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, காலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தினால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.
கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது. நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும். மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.