எரிபொருள் குறித்த அச்சத்தினால் விறகுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் சுவிஸ் மக்கள்!

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக்கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளார்கள்.

உண்மையில் உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் மக்கள் மனதில் நிலவிவருகிறது.

அரசுகள் ஒருபக்கம் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், மக்கள் தாங்களும் மாற்று ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கியுள்ளார்கள். அவ்வகையில், விறகுக்கடைகளை நோக்கிப் படையெடுக்கத் துவங்கியுள்ளார்கள் சுவிஸ் மக்கள்.

ஆகவே, விறகு விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே விறகு விலை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை நாங்கள் இந்த அளவுக்கு விறகு விற்றதில்லை என்கிறார்கள் வியாபாரிகள் சிலர். இதையெல்லாம் பார்க்கும்போது, மனிதன் முன்னேறுவதற்குப் பதிலாக மீண்டும் பழைய காலக்கட்டத்தை நோக்கிச் செல்கிறானோ என எண்ணத்தோன்றுகிறது.