யாழில் உள்ள அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு என அறிமுகமாகும் புதிய திட்டம்!

யாழ்ப்பாணத்திலிருந்து பணிக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வசதி கருதி புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து துறையினரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

புதிய தொடருந்து சேவை
இந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் பணிக்கு செல்வதற்காக போக்குவரத்து செய்வதில் சிக்கல் நிலையை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான புதிய தொடருந்து சேவையை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கிளிநொச்சிக்கு வந்து செல்லும் நிலையில் அவர்களின் வசதி கருதி போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டதன் பின், அடுத்த வாரம் முதல் தொடருந்து போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொடருந்து பொது முகாமையாளர் ஏ.டி.பி.செனவிரத்ன, யாழ். தொடருந்து நிலைய அதிபர் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட நிலைய அதிபர் ஸ்ரீ மோகன், கடற்றொழில் அமைச்சரின் மேலதிக ஒருங்கிணைப்புச் செயலாளர் கோடீஸ்வரன் ருஷாங்கன் ஆகியோர் புதிய தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் வடமாகாண தொடருந்து சேவை பணிப்பாளர் விசுமிதர மற்றும் கிளிநொச்சி தொடருந்து நிலைய அதிபர் சிகாமணி, மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோருடன், தொடருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.