திடீரென மூடப்பட்ட சுவிட்சர்லாந்தின் வான் பரப்பு

சுவிட்சர்லாந்தின் வான் பரப்பு அவசர அவசரமாக முழுமையான அளவில் மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையினால் இவ்வாறு வான் பரப்பு முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது.

இதனால் சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்களிலிருந்து புறப்படவிருந்த மற்றும் தரையிறங்கவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்
சுவிட்சர்லாந்து விமான போக்குவரத்து கட்டமைப்பானது ஸ்கைகயிட் நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இன்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரையில் வான் பரப்பு மூடப்பட்டிருக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான தொழில்நுட்ப கோளாறு எப்பொழுது நிலைமை வழமைக்கு திரும்பும் என்பது பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் விமானங்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.