இந்தியாவின் நிவாரண பொதியில் யாழிற்கு 75 ஆயிரம் பொதி ஒதுக்கப்பட்டுள்ளது!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கென 75 ஆயிரத்து 343 பொதிகளும் 18 ஆயிரத்து 836 பால்மா பைக்கற்றுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கை பால்மா பைக்கற்றுகளின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானித்துள்ளார்கள்.

இதில் குறிப்பாக வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பால்மா பவுடர் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருந்தால் ஒரு பக்கெட் பால் பவுடர் மட்டும் வழங்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு வருமானம் செலவு கணக்கெடுப்பின் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கே இவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.