அரசிற்கு நிபந்தனை விதிக்கும் அமைச்சர் ஹரின்

நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் தான் தற்போதைய அரசியல் பயணத்தில் இணைந்துகொண்டதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சு பணிகளை இன்று ஆரம்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் வாயால் வடை சுடாது, களத்திற்கு வந்து நாட்டை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றோம். இது பதவியோ மகுடமோ அல்ல, முள் கிரீடம். இது தற்கொலை போராட்டம்.

மக்களின் ஏச்சு பேச்சுகளையும் மக்களின் குற்றச்சாட்டுக்களையும் கேட்டுக்கொண்டு எலும்பு சாப்பிட போனீர்களாக என்ற பேச்சுகளை கேட்டுக்கொண்டு, அனைத்தையும் மறந்து விட்டு, நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக மேற்கொண்ட நடவடிக்கை.

21 வது அரசியலமைப்புத் திருது்தச் சட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், நான் அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஹரின்,

கேள்வி: சுயாதீனமாக செயற்பட போவதாக கூறி மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் சென்று அமர்ந்தீர்களே?.

பதில்: நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே இருக்கின்றேன்.

கேள்வி: ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் பதவியை பொறுப்பேற்று கொண்டீர்கள். நகைப்புக்குரிய கதையை கூறினீர்கள். பின்னர் அந்த கதை உண்மையில்லை என்பது உறுதியானது. நீங்கள் திடமான அமைச்சர், உங்களுக்கு கண்களில் ஏதேனும் கோளாறு உள்ளதா?.

பதில்: ஏன் அது தெரியவில்லை என்பதற்காகவா?

கேள்வி: ஜனாதிபதியின் முகத்தை கூட பார்க்கவில்லை என்று கூறியதற்காக கேட்டேன்.

பதில்: ஒரு அருவருப்பு இருக்கின்றது என்பதை நான் தெளிவாக கூறினேன். அருவருப்புதான் உள்ளது. அந்த நபர் மீது அல்ல. ஜனாதிபதி என்ற பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும்.

எப்படி ஆடை அணிந்துக்கொண்டு ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சு பதவியை பெற்றீர்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கேட்கின்றனர்.

சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை ஏற்பதாக கூறினார். பிரதமர் பதவியை ஏற்பதாக சஜித் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர். அவர் பிரதமராக பதவி ஏற்றிருந்தால், யார் முன்பாக நின்று அந்த பதவியை ஏற்றிருப்பார்?. என்னிடம் இருந்தா?. இல்லையே.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து நியமனக் கடிதத்தை பெற்று அவர் முன்னிலையிலேயே அந்த பதவியை ஏற்றிருப்பார். இவை சிறுப்பிள்ளை தனமான வாதங்கள், நாம் நாட்டின் பிரச்சினை பற்றி சிந்திப்போம்.

ஜனாதிபதியை எனது மனசாட்சிபடி எதிர்க்கின்றேன். நான் இந்த சந்தர்ப்பத்தில் கட்சியில் இருந்து சுயாதீனமாகி கட்சி சார்பில்லாத அரசாங்கத்தில் இணையும் முடிவை எடுத்தேன். கட்சியும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படியான சந்திர்ப்பத்தில் எடுத்த முடிவு. நான் எடுத்த முடிவு குறித்து பெருமைப்படுகிறேன் என ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.