குழந்தை திருமணத்தால் நிகழும் பாதக விளைவுகள்

பெண் குழந்தைகள் மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உடல்நலம், ஊட்டச் சத்து, கல்வி, குடும்ப வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல் போன்ற குழந்தைகளின் அனைத்து உரிமைகளும், குழந்தைத் திருமணத்தின் மூலம் அப்பட்டமாக மீறப்படுகின்றது;

கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்; அடிக்கடி கருவுற வாய்ப்பு அதிகம்; இது உடல் நலத்தைப் பாதிக்கும்; உடல் பலவீனமடைவதால் மருத்துவச் செலவு அதிகமாகி வறுமைக்கு வழிவகுக்கும்; ரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும்.

பிரசவத்தின் போது சிக்கலான பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, சிசு மரணம் மற்றும் தாய் மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் அதிகம்; எடை குறைவான குழந்தைகள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல்; மனவளர்ச்சி மற்றும் பாலியல் முதிர்ச்சி முழுமையடையும் முன் திருமணம் செய்வதால், கணவர் மற்றும் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வதில் பிரச்சினைகள் அதிகமாகும்;

இது குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி இரண்டாவது திருமணத்திற்கு வழிவகுக்கும். இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்; குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள்.

இது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு வழிவகிக்கிறது; கல்வி மறுக்கப்படுவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை குறையும். குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் செய்ய முடியாது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.