நாக சைதன்யா மீது அபராதம் விதித்த போலீசார்

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாக சைதன்யா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு படவுலகில் பிரபல நடிகரான நாகார்ஜுனின் மகன் மற்றும் நடிகரான நாக சைதன்யா டொயோட்டா கார் ஒன்றில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியே சென்றுள்ளார். அவரது காரை சோதனை சாவடியில் வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். இதில், அவரது காரில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கும்படி அவரிடம் கூறியுள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.715 அபராதமும் விதிக்கப்பட்டது.

போலீசார் பின்பு கருப்பு ஸ்டிக்கரை நீக்கினர். இதனை தொடர்ந்து செலான் தொகையை போலீசாரிடம் நாக சைதன்யா கட்டி விட்டு புறப்பட்டு சென்றார். இதற்கு முன்பு போக்குவரத்து விதிகளை பின்பற்றாததற்காக ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மஞ்சு மனோஜ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் போலீசாரிடம் அபராதம் கட்டி உள்ளனர்.

இந்தியாவில் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது மோட்டார் வாகன சட்டப்படி சட்டவிரோதம் ஆகும். இந்த கருப்பு ஸ்டிக்கரால் காரில் இருப்பது யார் என தெரியாத சூழலில், வாகனத்திற்குள் நடைபெறும் மறைமுக குற்றங்களை குறைக்கும் நோக்கில் இதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.