பிரான்ஸில் பெண்களை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

பிரான்ஸில் இரு பெண்களை கடித்துக்குதறிய வளர்ப்பு நாய் ஒன்று காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு 8.10 மணி அளவில் இங்குள்ள avenue Maurice-Thorez வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததையடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

வீதியின் நடைமேடைப்பகுதியில் குறித்த பெண் விழுந்து கிடக்க அவரை molosse வகை வளர்ப்பு நாய் பல தடவைகள் கடித்து, மீண்டும் கடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது.

இதனையடுத்து அப்பெண்ணை தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் ஒரு வழியாக மீட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க முற்பட, குறித்த நாய் அப்போது மற்றொரு பெண்ணை கடித்துள்ளது.

இப்போது துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர் இரண்டாவது பெண்ணை காப்பாற்றும் நோக்கோடு குறித்த நாயை சுட்டுக்கொன்றதுடன் வளர்ப்பு நாயின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

பொது இடங்களுக்கு வளர்ப்பு நாயை அழைத்துச் செல்லும் போது அதற்கு வாய்க்கவசம் அணிவிக்கவேண்டும் எனும் சட்டத்தை மீறி, அவர் நாயை அழைத்துவந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.