அணி வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் விளையாடுகிறார்- ரஸல் அதிரடி குறித்து ஸ்ரேயாஸ் கருத்து

ரஸல் தெளிவாக விளையாடியதை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடர்ந்து 2வது முறையை வெற்றியை ருசித்துள்ளது.

ஏப்ரல் 6 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்க உள்ளது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் கே.கே.ஆர்.கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், தெரிவித்துள்ளதாவது:

அவர் (ரஸல்) மிகவும் தெளிவாக விளையாடுவதை பார்ப்பது மிகவும் நிம்மதியாக இருந்தது. இது அவரது சிறப்பான அதிரடி ஆட்டம். நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வயதாகி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர் வலுவாகி வருகிறார் என்று நான் சொன்னேன்.

அவர் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார். நான் செல்லும் போது ஒவ்வொரு முறையும் அவரை ஜிம்மில் பார்க்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்று வெறியுடன் அவர் இருக்கிறார். சேர்ந்து விளையாடுவதற்கு அவர் ஒரு மிக சிறந்த வீரர். இவ்வாறு ரஸல் குறித்து ஷ்ரேயாஸ் கூறியுள்ளார்.