மணீஷ் பாண்டே, சித்தார்த் அபார சதம் – முதல் நாளில் கர்நாடகா அணி 392 ரன்கள் குவிப்பு

ரெயில்வேஸ் அணிக்கு எதிராக கர்நாடக அணியின் கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மணீஷ் பாண்டே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்தது.

ரஞ்சிக் கோப்பை எலைட் குரூப் பிரிவில் கர்நாடகா, ரெயில்வேஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் கர்நாடகா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

அகர்வால் 16 ரன்னிலும், படிக்கல் 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ரவிகுமார் சமர்த் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டுக்கு கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி ரெயில்வேஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

267 ரன்கள் சேர்த்த நிலையில், மணீஷ் பாண்டே 156 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஸ்ரீனிவாஸ் ஷரத் 5 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.