கோட்டாபயவின் விசேட ஆலோசனை! இராணுவ வீரர்களை களமிறக்கும் திட்டத்தை அறிவித்தார் இராணுவ தளபதி…

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள அனைத்து வயல்கள் மற்றும் பயிரப்படும் இடங்களுக்கு தலா ஒரு இராணுவ வீர் என வகையில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பயிர் செய்கையை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. கமத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிப்பது முதல் அறுவடை செய்யப்படும் வரை அனைத்து உதவிகளும் இராணுவத்தினரால் வழங்கப்படும்.

கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இராணுவ வழங்கிய உயர் பங்களிப்பை போன்று விவசாயத்தை முன்னேற்றவும் இராணுவத்தினர் உச்சளவிலான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றனர்.

இதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

விவசாயத்தை முன்னேற்ற பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள யோசனைகளும் இதன் போது கவனத்தில் கொள்ளப்படும்.

வடக்கு, கிழக்கு உட்பட தெரிவு செய்யப்பட்டுள்ள பயிர் நிலங்களில் ஏற்கனவே இராணுவத்தினரை பயன்படுத்தி பல்வேறு பயிரிடும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.