பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஆப்பிள் பொதுவாகவே நாம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதிலும் வைட்டமின்கள் , தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளாவனாய்டுகள் நிறைந்த ஆப்பிள்களை தவறாமல் சாப்பிடுவது, பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இதேவேளை, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என ஒரு பழமொழியே உள்ளது. ஏனெனில் இதில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அனைத்து நோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது.

இந்நிலையில், சிவப்பு ஆப்பிள்களுக்கு இணையாக இப்போது பச்சை ஆப்பிள்களும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர் சிவப்பு ஆப்பிள்களை மட்டுமே வாங்குகின்றனர். அதை மட்டுமே வாங்கி பழக்கப்பட்ட நமக்கு பச்சை ஆப்பிளை வாங்க மனம் செல்வதில்லை.

உண்மை என்னவெனில் சிவப்பு ஆப்பிளை போன்றே பச்சை ஆப்பிளிலும் சத்துக்கள் நிறைவாக உள்ளன. சிவப்பு ஆப்பிளை காட்டிலும் கூடுதலான சில நன்மைகளையும் அவை அளிக்கின்றன.

பச்சை ஆப்பிள் அளிக்கும் நன்மைகள் :

கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் : பச்சை ஆப்பிள் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின்-A கண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனவே, பச்சை ஆப்பிளை உட்கொள்வது கண்களின் பலவீனம் அல்லது வறட்சி பிரச்சனைக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.

சர்க்கரை நோய்க்கு நல்லது : சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரை மிகவும் குறைவு. மேலும், நார்ச்சத்து போதுமான அளவு உள்ளது. எனவே, பச்சை ஆப்பிள் சர்க்கரை நோய் பிரச்சனைக்கு பெரும் நிவாரணம் தருகிறது. குறிப்பாக நீரிழிவு நோயின் வகை-2 கட்டத்தில் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் பேருதவியாக இருக்கிறது.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது : பச்சை ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நமது நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. எனவே, நுரையீரல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக குளிர்காலத்தில் பச்சை ஆப்பிள்களை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

மலச்சிக்கல் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைக்கு நல்லது : பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. எனவே, இதை சாப்பிடுவதன் மூலம், நமது செரிமானம் சரியாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறுகிறோம். மேலும், இதில் காணப்படும் பெக்டின் என்ற தனிமம் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது. எனவே, நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க, பச்சை ஆப்பிள்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

எலும்பு வலிமைக்கு உதவும்: பச்சை ஆப்பிளில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளின் வலிமைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் k சத்து பச்சை ஆப்பிளிலும் காணப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்புக்கு இது முக்கியமானது. எனவே, எலும்புகளின் வலிமைக்கு பச்சை ஆப்பிளை தினமும் உட்கொள்ளலாம்.

சரும ஆரோக்கியம் : பச்சை ஆப்பிள் நமது சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின்-c அதிகம் இருப்பதால் நமது சருமத்தை இளமையாக வைத்திருக்கும். இது தவிர, பச்சை ஆப்பிளில் வைட்டமின் K மற்றும் A உடன் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்தில் வயதான தாக்கத்தை குறைக்கிறது. பச்சை ஆப்பிள்களை சாப்பிடுவது உங்களை இளமையாக வைத்திருப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.