மட்டக்களப்பில் நேற்றிரவு சில மணி நேரம் மட்டு. கல்லடி பகுதியில் பதற்ற நிலை நிலவியது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாது இயங்குவதாக கூறப்படும் நிலையில், வீதி போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்து உரிமையாளர்கள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கும் சில பேருந்துகளை வழிமறித்ததன் காரணமாகவே இந்த பதற்ற நிலை தோன்றியது.
பதற்ற நிலையினை தடுப்பதற்கு அங்கு வந்த பொலிஸார் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் 3 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து பேருந்தை மீண்டும் காத்தான்குடிக்கு திருப்பி அனுப்பினர்.
எனினும் பொலிஸாரை ஏமாற்றி குறித்த பேருந்துகள் மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துள்ளது. இதேவேளை தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பேருந்து முரண்பாடு காரணமாக பிரயாணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்றபோது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் போக்குவரத்து சேவை அதிகாரி குறித்த இடத்திற்கு சமூகமளிக்கக்கவோ அல்லது முரண்பாட்டை தீர்த்துவைக்க சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது.
எவ்வாறெனினும் வீதிப் போக்குவரத்து அதிகார சபையால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாத அதிகளவான பேருந்துகள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான அன்றாட சேவையினை தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இதனால் வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் உள்ள பேருந்து உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







