ஜேர்மனியில் வசிக்கும் இந்திய பெண் மீது தாக்குதல்

ஜேர்மனியில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கெட்டுப்போன பாலுக்காக இழப்பீடு கேட்டபோது, ​​கடையில் இருந்து இனரீதியாக அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஜேர்மனியில் Magdeburg நகரத்தில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர் ஸ்ருதி லேகா (Srruthi Lekha), தனது நண்பருடன் கெட்டுப்போன பாலுக்காக இழப்பீடு கேட்கச் சென்றபோது, ​ கடை நிர்வாகத்தினர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறினார்.

அந்தச் சம்பவத்தைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், ஒரு வீடியோவுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், ஸ்ருதியின் நண்பர் கடை ஊழியர்களால் கடுமையாகத் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது.

ஸ்ருதி தனது பதிவில், “நான் Kaufland-ல் இருந்து பால் வாங்கியிருந்தேன், அது மிகவும் கெட்டுப்போனது, நாங்கள் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டோம். இது பற்றி விசாரித்து பதில் மற்றும் உரிய இழப்பீடு கேட்க, நானும் எனது நண்பர் ஹர்ஷாவும் (அவரும் இந்தியர் தான்) காஃப்லாண்டிற்குச் சென்றோம்.

கடையில் இருந்த ஊழியர்கள் சற்று விவாதித்துவிட்டு 30 யூரோ இழப்பீடு வழங்குவதாக கூறினர். நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், காஃப்லாண்ட் ஊழியர் ஒருவர், இழப்பீட்டை வழங்க மறுத்துவிட்டு, ஒரு வழக்கறிஞரை அழைத்து வாருங்கள் என்று கூறினார்” என்று லேகா ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்தார்.

மேலும் அவர்களுக்கு இழப்பீடும், பால் போத்தலோ வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், “நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்பதற்காக அந்த கெட்டுப்போன பால் போத்தலைத் திரும்பக் கேட்டோம், ஆனால் அவர்கள் அதை வழங்க மறுத்தனர்.

‘நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கிறீர்கள், இங்கே நீங்கள் இழப்பீடு கேட்க முடியாது’ என்று கூறினர்,” என்றும் அவர் கூறினார்.

இறுதியில் அவர்கள் இருவரும் கடையிலிருந்து வெளியே விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது ஊழியர் ஒருவர் ஸ்ருதி லேகாவை தாக்க முயல்வது விடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.