ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும்.

இதில் Family reunion stream-க்கென 77,300 இடங்களும் Skill stream-க்கென 79,600 இடங்களும், சிறப்புத் தகுதி மற்றும் சிறுவர்களுக்கென 3100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2022-23 நிதியாண்டில் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டில் இது 235,000 ஆக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள், சர்வதேச மாணவர்கள், குறிப்பிட்ட வகை skilled விசா உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் தற்போது நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேநேரம் ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் வருவதற்கு விதிவிலக்கு அனுமதிபெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆஸ்திரேலியாவிற்கான தற்காலிக பட்டதாரி (subclass 485) விசாக்களை வைத்திருந்தவர்கள் எல்லைக்கட்டுப்பாடு காரணமாக இங்கு வரமுடியாத நிலை காணப்பட்ட பின்னணியில், இவர்களது விசா கடந்த 2020 பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ காலாவதியாகியிருந்தால், அவர்கள் மீண்டும் subclass 485 விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

அவர்களது முன்னைய விசா எந்தளவு காலப்பகுதிக்கு வழங்கப்பட்டிருந்ததோ, அதேயளவு காலப்பகுதிக்கு இவ்விசாவை மீண்டும் பெறமுடியும். புதிய மாற்றீட்டு விசாவுக்கு 1 ஜுலை 2022 முதல் விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக பட்டதாரி துணைப்பிரிவு (Temporary Graduate subclass) 485 விசாவில் இங்கு வரும் பாடநெறி பட்டதாரிகளால் முதுகலை (Masters by Coursework graduates) ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் காலம், 2 வருடங்களிலிருந்து 3 வருடங்களாக அதிகரிக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு தீர்மானித்த சில குறிப்பிட்ட பிரிவு skilled migrants, நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பது இலகுவாக்கப்பட்டுள்ளது.

தற்காலிக திறன் பற்றாக்குறை (subclass 482) short-term stream மற்றும் தற்காலிக வேலை திறன் (subclass 457) ஆகிய விசாக்களில் இருந்தவர்கள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஹொங்கொங் நாட்டவர்கள் subclass 189 (Hong Kong Skilled Independent Stream) மற்றும் subclass 191 (Hong Kong Regional Stream) ஊடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தகுதிபெறுகின்றனர்.

மார்ச் 2022 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடம் பெறுவதை இலகுவாக்கும் வகையில் New Zealand stream of the Skilled Independent (Subclass 189) விசாவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடிவரவுச் சட்டத்தின் Section 48 bar-ஆல் பாதிக்கப்பட்டிருந்தவர்களும் 190, 491 அல்லது 494 ஆகிய பிரிவு skilled migration விசாக்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டே விண்ணப்பிப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், பல்சமூகங்களை உள்ளடக்கிய Community Sponsorship செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது.

CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot (சமூக அகதிகள் ஒருங்கிணைப்பு மற்றும் தீர்வு பைலட்) என்ற இத்திட்டமூடாக சமூக அமைப்புகள், சமய அமைப்புகள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 1500 அகதிகளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தமுடியும்.