ஒமிக்ரோன் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட இலங்கை தயார்!

கோவிட் வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்தால் மரபணு பகுப்பாய்வு மூலம் கண்டறிய ஆய்வக வசதிகள் இருப்பதாக என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே கலந்துகொண்டார். அத்துடன், சுகாதார அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார்.

ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மற்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

“இதுவரை இருந்த மற்ற நான்கு கோவிட் தொற்றின் விகாரங்களை விட ஒமிக்ரோன் வேகமாக பரவக்கூடும், மேலும் ஒரு நபர் கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் கூட பாதிக்கப்படலாம்” என்று பேராசிரியர் நீலிகா மாளவிகே கூறினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் ஒமிக்ரோன் மாறுபாட்டின் நடத்தை பற்றிய தெளிவான தகவல்களை பெற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், மாறுபாடுகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

உலகெங்கிலும் உள்ள 24 நாடுகளில் ஒமிக்ரோன் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகளாவிய சுகாதாரத் துறைகள் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் தலையீடு காரணமாக, கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை உலகில் தனது நிலையை மேம்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதன்போது கூறியுள்ளார்.

புதிய கோவிட் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்றும், சரியான சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றுவது மற்றும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், ஒமிக்ரோன் மாறுபாடு குறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும், இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை வைத்தியர் ஜீவந்தர வலியுறுத்தியுள்ளார்.

பொது சுகாதார விதிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும், வைரஸுக்கு பயப்படுவதை விட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை வெற்றியடைந்துள்ளதாகவும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.