உப்புமா பிரட் செய்வது எப்படி?

தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துபோனவர்களுக்கு வித்தியாசமான முறையில் இப்படி பிரட் உப்புமா செய்துகொடுத்தால் போதும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த பிரட் உப்புமா ரெசிபி சுவையாக எப்படி செய்வது? என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 8, கடுகு – கால் டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

முதலில் பிரட் உப்புமா செய்ய முதலில் எட்டு ஸ்லைஸ் பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட வேண்டும்.

பின்னர், கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பருப்பு வகைகள் பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதியளவு வதங்கியதும் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும். இவை லேசாக வதங்கியதும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி மசிய வதங்கியதும் தேவையான அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்குங்கள். நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

மசாலாவுடன் பிரட் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து வர வதக்கி விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் எல்லாமே ஒன்றுடன் ஒன்றாக கலந்து சூப்பரான ஃப்ளேவரில் சுடச்சுட பிரட் உப்புமா ரெடியாகி விடும்.

நறுக்கிய மல்லித் தழைகளை தூவி பரிமாற வேண்டியது தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.