உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் தோற்க ஹசன்அலி தான் காரணமா?

டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்க ஹசன் அலி தான் காரணம் என பலரும் விமர்சித்துள்ள நிலையில் அது குறித்து வீரேந்திர சேவாக் பேசியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதியானது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது தனது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் தோற்றது.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி கைவிட்ட கேட்சின் மூலம் தான் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைய ஹசன் அலி மட்டும் காரணம் இல்லை.

ஏனெனில் 19 ஓவரில் அவர் கேட்சை தவற விட்ட பிறகு அடுத்த 3 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு தனிப்பட்ட வீரரின் சொதப்பல் காரணமாக இந்தத் தோல்வி நிகழவில்லை என்றும் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட தவறியதன் காரணமாக இந்த தோல்வி அமைந்தது என்றும் சேவாக் கூறியுள்ளார்.