பெண்களுக்கு ஏற்ற புடவைகளின் புது வரவுகள்

புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.