உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு…! எந்த நாட்டில் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு, நியூஸிலாந்து தோட்டமொன்றில் விளைந்துள்ளது.

டக் (Doug) என்று செல்லமாக அழைக்கப்படும் அந்தக் கிழங்கின் எடை 7.9 கிலோகிராமாகும்.

ஹமில்டனில் உள்ள கொலின், டொன்னா கிரேக்-பிரௌன் தம்பதியரின் பண்ணையில் இந்த உருளைக்கிழங்கு விளைந்தது. அறுவடை செய்ய தோண்டிய போது, விசித்திர தோற்றத்தை கண்டு மிரண்ட தம்பதியினர், அது பூஞ்சையாக இருக்கலாமென முதலில் நினைத்தனர்.


எனினும், அதன் ஒரு பகுதியை சுவைத்த போது, உருளைக்கிழங்கு என்பது தெரிய வந்தது.
ஓகஸ்ட் 30ஆம் திகதி இந்த உருளைக்கிழங்கு தோண்டியெடுக்கப்பட்டது.

டக், தற்போது குளிர்பதனப் பெட்டிக்குள் பதப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குள் டக், ஒரு கிலோகிராம் எடை குறைந்துள்ளதாகவும் கிரேக்-பிரௌன் இணை கூறினர்.

டகின் பிரபலம் குறைந்த பிறகு, அதனை மதுபானமாக்கத் திட்டமிட்டுள்ளனர் தம்பதியர். டக்கை பார்க்க பெருமளவானவர்கள் வந்து செல்கிறார்கள்.

டக், தற்போது கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறக் காத்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னர் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய கிழங்கின் எடை 4.98 கிலோகிராம் என்று கூறப்படுகிறது. அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் கிளேஸ்புரூக் ஆவார்.