கிழக்கு மாகாணத்தில் பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ வணிகசிங்கவின் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கிணங்க ஆளுநரின் விசேட பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிழக்கு மாகாண நான்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர்களும் மாகாண போக்குவரத்துப் பணிப்பாளர்களும் யூனிசெஃப் பிரதிநிதிகளும் இக் கலந்துரையாடலில் கலந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார்.

மேலும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் zoom இணைய வழியூடாக இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

இவ் விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கோவிட் – 19 கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து காணப்பட்டாலும் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு நாடு படிப்படியாக சாதாரண நிலைக்கு வரும் போது இதை மேலும் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதே எமது மக்களின் செயல்பாட்டிலேயே தங்கியுள்ளது.

கோவிட் 19 கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் ஏற்பட்டால் மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமுண்டு எனினும் கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. 20 வயதுக்கு மேற்பட்ட சனத் தொகையின் அடிப்படையில் 90 வீதமானவர்கள் முதல்கட்டமாக தடுப்பூசியும் 80 வீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 95 வீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலும் நோயின் தாக்கம் வெகுவாக குறைய அதிக வாய்ப்பு உண்டு. இருப்பினும் நாடு சாதாரண அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும் மக்கள் பூரண பாதுகாப்பைப் எடுத்துக்கொள்வது சம்பந்தமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சகல வழிகாட்டல்களையும் பூரணமாக பின்பற்றுதல் மக்களின் கடமையாகும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் தொற்று பரவல் அடைவதில் அவதானம் செலுத்த பின்வரும் விடயங்களை பாடசாலைகளில் கடைப்பிடிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் கேட்டுக்கொண்டார்.