பற்களின் வெண்மையை இயற்கையாக மீண்டும் அழகாக்க

பற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது.

பற்கள் பளிச்சென்று வெண்மை நிறத்தில் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக பலரும் விரும்புவார்கள். ஒருசில சமையல் பொருட்கள், பழ வகைகளை கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். பால் பொருட்கள் ஏதாவதொரு வகையில் சாப்பிடும் உணவு பொருட்களுடன் கலந்திருக்கும். பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களில் லாக்டிக் அமிலம் உள்ளடங்கி இருக்கும். கால்சியமும் நிறைந்திருக்கும்.

இத்தகைய பால் பொருட்களை உட்கொள்வது உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும். அத்துடன் பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கும் வித்திடும். இவை தவிர இந்த பால் பொருட்களில் புரதம் மற்றும் கேசீன் உள்ளது. இவற்றுள் கேசீன், பிளீச்சிங் ஏஜென்ட் போல் செயல்படக்கூடியது. அது பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை போக்குவதுடன் பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவும்.

ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. மேலும் பல் சிதைவு, நிறம் மாறுதல், பிளேக் போன்ற பல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். ஸ்ட்ராபெர்ரியில் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பிளீச்சிங் போல் செயல்பட்டு பற்களை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டது.

ஸ்ட்ராபெர்ரி, அமில தன்மையும் அதிகம் கொண்டது. இதன் பி.எச். அளவு 3 முதல் 4-க்கு இடைப்பட்டதாக அமைந்திருக்கிறது. அது பற்களின் மேல் அடுக்குகளை வெள்ளை நிறமாக மாற்ற துணைபுரியக்கூடியது. ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தை துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, குழைத்துக்கொள்ளவும். பேஸ்ட் போல இதை பயன்படுத்தி பிரஷ் கொண்டு பல் துலக்கி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

பற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து கொண்ட அது உமிழ்நீர் உற்பத்தியையும் அதிகரிக்க செய்து பற்களை சுத்தம் செய்ய உதவும். பற்களின் மேற்பரப்பில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவும். ஆப்பிள் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவும். தினமும் ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குவதோடு பற்களுக்கும் நன்மை தரும்.

‘சீஸ்’ எனப்படும் பாலாடைக்கட்டிகளை மென்று சாப்பிடுவதும் பற்களை வெண்மையாக்க உதவும். தினமும் ஒரு கப் தயிர் பருகி வருவதும் பற்களின் பிரகாசத்திற்கு வித்திடும்.