விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கங்குலி

வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் என்று சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

கோலியின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து. தேவையான தருணத்தில் அணியை தன்னம்பிக்கையோடு வழிநடத்தக்கூடியவர். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டன்களில் அவரும் ஒருவர். இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

20 ஓவர் அணியின் கேப்டனாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். அதன் பிறகும் அவர் இந்தியாவுக்காக நிறைய ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.

துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி அளித்த பங்களிப்பு மகத்தானது. அதை ஒரு போதும் மறக்க முடியாது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதை நாங்கள் மதிக்கிறோம். அவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.