பிரபல நாடொன்றில் சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக தடுப்பூசியை செலுத்த தொடங்கிய நாடு பிரித்தானியா ஆகும். எனினும் தற்பொழுது அங்கு மற்ற நாடுகளைவிட தடுப்பூசி செலுத்தும் பணியில் சற்று பின்தங்கி உள்ளது. தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை எனினும் , இந்த அறிவிப்பினை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக கிறிஸ் விட்டி தலைமையிலான பிரித்தானியாவின் தலைமை மருத்துவர்கள் குழு ஓரிரு தினங்களில் இதற்கான தீர்வை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அரசுடன் தொடர்பிலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக லண்டனில் உள்ள மருத்துவர்கள், ஆசிரியர்கள் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.