சென்னை திருமுல்லைவாயலில் முதலிரவு அறையில் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் தாலுகா, குள்ளப்பான் தண்டலம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்வர் சரஸ்வதி. இவர் திருமுல்லைவாயல் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில்,
`என்னுடைய தம்பியான கார்த்திகேயனுக்கு உறவுக்கார பெண்ணான நந்தியினுடன் 8-ம் தேதி திருமணம் நடந்தது. திருமுல்லைவாயலிலுள்ள பெண் வீட்டில் அன்றைய தினம் முதலிரவுக்காக மணமகனையும் மணமகளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு பக்கத்து அறையில் நாங்கள் தூங்கினோம். 9-ம் திகதி காலை 6 மணியளவில் மணமகள் நந்தினி கதவைத் தட்டி அலறினாள். உடனே நாங்கள் பூட்டிய அறையைத் திறந்து பார்த்தபோது மணமகன் காத்திகேயன் முதலிரவு அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான்.
உடனே நான் நந்தியினிடம் `இரவில் ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்டேன். அதற்கு அவள் `பிரச்னை எதுவும் இல்லை. கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்தார். நான் சமாதானம் செய்த பிறகு நான் தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்’ என கூறினார். எனவே, என் தம்பி கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “மணமகனின் சகோதரி சரஸ்வதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். மணமகன் கார்த்திகேயனின் அத்தை மகள்தான் நந்தினி. பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் சிறப்பாக நடந்திருக்கிறது.
முதலிரவு அறையில் என்ன நடந்தது என்று மணமகள் நந்தினியிடம் விசாரித்தபோது கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்ததாகவும், பாத்ரூம் சென்றுவிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அப்போது கார்த்திகேயனிடம் `பிரச்னை எதுவும் இல்லை’ என நந்தினி ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார்.
மணமகள் நந்தினியும், அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருப்பதால் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு இரு தரப்பு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதுடன், கார்த்திகேயனின் செல்போனை ஆய்வு செய்துவருவதாகவும் பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்நிலையில் முதலிரவில் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.







