தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு கொரோனா.!

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா நோய் பரவல் உறுதியாகி வருகிறது.

மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்லூரி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1 மாணவிக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கும், மதுராந்தகம் அரசு உதவி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் கவலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.