திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 பேர் மரணம்!

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொரோனா தொற்றால் 7பேர் பலியாகியுள்ளதுடன் 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் சம்பவித்துள்ளது. அத்துடன் 131 ஆண்கள், 104 பெண்கள் உள்ளிட்ட 235 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரைக்கும் 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு வயது தொடக்கம் ஐந்து வயது வரை 147 சிறுவர்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 375 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணித் தாய்மார் 148 பேர் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த எழுவருடன் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 9,815 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.