சுவிட்சர்லாந்தில் இந்த வாரத்தில் இரட்டிப்பான கொரோனா தொற்று

சுவிட்சர்லாந்தில் இந்த வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதுடன், டெல்டா வகை கொரோனா வைரஸின் பரவலும் அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 1,609பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகும்.

சென்ற வாரம் புதிதாக தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 827. அத்துடன், புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களை சோதிக்கும்போது, 83 சதவிகித தொற்றுக்கு காரணம் வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் சீராகவும் உள்ளது.

மொத்தத்தில் 9 பேர் மட்டுமே இந்த வாரம் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். இதுவரை சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,898.