இன்று நா.உறுப்பினராக பசில் சத்தியப்பிரமாணம்!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

அத்துடன் இன்றைய தினமே அவர் பொருளாதார விவகாரம் தொடர்பிலான அமைச்சினை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டது.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கமைய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன். இன்றைய தினமே பொருளாதார விவகாரம் தொடர்பிலான அமைச்சினை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையிலும், அமைச்சுக்களின் விடயதானங்களிலும் பெரும்பாலும் மாற்றம் ஏற்படும் என அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை அரசியல் மட்டத்தில் பிரதானமாக ஆளும் தரப்பின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கூட்டணியினர் கருதுகின்றனர்.