உலகில் இதுவரை நடைபெற்ற பல விநோத சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்து திகைக்கவும் வைத்திருக்கின்றன. அந்த வகையில் பெண் ஒருவர் தன்னுடைய கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ரகமாக இருக்கிறது. ஆனால் கொலையையும் தாண்டி அவர் செய்த செயல் தான் உண்மையில் காவல்துறையினரையும் கூட திகைக்க வைத்திருக்கிறது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள Sao Goncalo என்ற நகரைச் சேர்ந்த ஆண்ட்ரே மற்றும் கிறிஸ்டினா மச்சாடோ (வயது 33) என்ற தம்பதியர்களுக்குள் கடந்த ஜூன் 7ம் தேதி இரவில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாகவே அவர்களுக்கும் சண்டை சச்சரவு என இருந்து வந்தாலும் இருவரும் வாழ்க்கையில் இருந்து பிரிவது குறித்து ஏற்பட்ட தகராறில் மனைவி கிறிஸ்டினா, தன்னுடைய கணவர் ஆண்ட்ரேவை கொலை செய்திருக்கிறார்.
இந்த கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தெரியப்படுத்தவே விரைந்து வந்த போலீசார் அவர்களின் வீட்டுக்கு சென்ற போது ஆண்ட்ரேவின் உடல் நிர்வாணமாகவும், உடல் சிதைக்கப்பட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து கிறிஸ்டினாவிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கணவன் – மனைவி இருவரும் நிரந்தரமாக பிரிவது குறித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணவர் ஆண்ட்ரேவை கொலை செய்த கிறிஸ்டினா, கணவரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து அதை வாணலியின் வைத்து சோயா எண்ணெய்யில் போட்டு பொறித்துள்ளார். இந்த தகவல்களை கேட்ட காவல்துறையினர் மிரண்டுள்ளனர். கொலை செய்ததுடன், உடலை சிதைத்தது போன்ற குற்றங்களுக்காக கிறிஸ்டினாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தம்பதியருக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் இருவரும் சம்பவம் நடந்த போது எங்கிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.
10 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய போதும் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் இருந்திருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்த போதிலும், மீண்டும் இணைந்து வாழத்தொடங்கியிருக்கின்றனர். தன்னுடைய கணவர் அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், சுயபாதுகாப்புக்காக அவரை கொலை செய்ததாகவும் மனைவி காவல்துறையினரிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அவரின் மர்ம உறுப்பை வாணலியில் போட்டு பொறித்திருப்பதால் கிறிஸ்டியனா கூறுவதை காவலர்கள் சந்தேகத்துடனே பார்க்கின்றனர். அவருக்கு மனநல குறைபாடு இருக்கலாமோ என்ற கோணத்திலும் மருத்துவர்களின் உதவியை காவல்துறையினர் நாடியிருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கிறிஸ்டினா கணவரிடம் இருந்து பிரிந்து விட ஆசைப்பட்டதாகவும், அதனை ஆண்ட்ரே மறுத்துவிட்டார் எனவும் என்னிடம் இருந்து பிரிவதென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கிறிஸ்டினாவின் வழக்கறிஞர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வரும் அதே நேரத்தில் இந்த கொடூர கொலை சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







